விற்பனைக்கு மாடுகளை ஏற்றி சென்ற4 டிரைவர்கள் மீது வழக்கு


விற்பனைக்கு மாடுகளை ஏற்றி சென்ற4 டிரைவர்கள் மீது வழக்கு
x

விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நாமக்கல் அருகே லாரிகளில் மாடுகளை அடைத்து விற்பனைக்கு ஏற்றி சென்ற 4 டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்

வாகன சோதனை

நாமக்கல் அருகே உள்ள புதன்சந்தையில் வாரம் தோறும், செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை கூடும். அங்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். அவ்வாறு விற்பனை செய்யப்படும் மாடுகளை வியாபாரிகள் லாரி, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்களில், அடைத்துக் கொண்டு, ஏற்றி செல்வர்.

அதனால் மாடுகள் வதை செய்யப்படுவதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, விலங்குகள் வதைதடுப்பு சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜன் தலைமையிலான குழுவினர், நேற்று நாமக்கல்–-சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விதிமுறை மீறி வாகனங்களில் உணவு, தண்ணீர் இன்றி மாடுகளை மிகவும் நெருக்கமாக அடைத்து கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்களை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

டிரைவர்கள் மீது வழக்கு

விசாரணையில் புதன்சந்தையில் மாடுகளை வாங்கி பொள்ளாச்சிக்கு, 4 லாரிகளில் 102 மாடுகளை கொண்டு செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்படி, விலங்குகளை வன்கொடுமை செய்து வாகனத்தில் ஏற்றி சென்ற டிரைவர்கள் கோபிசெட்டிப்பாளையம் பழனிசாமி (வயது48), நாமக்கல்லை சேர்ந்த அன்பழகன் (38), ரவி (48), ஓலப்பாளையம் பெரியசாமி (36) ஆகிய 4 பேர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து விசாரணைக்காகவும், கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காகவும் அழைக்கும்போது மாடுகளுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவாதம் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர்.


Next Story