கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு


கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டி புகாரில் கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கந்து வட்டி

கிருஷ்ணகிரி அருகே உள்ள வெங்கடாபுரம் அதியமான் நகரை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (வயது 55). இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த ரகு என்பவரிடம் ரூ.18 ஆயிரம் கடந்த 2.2.2021 அன்று கடன் வாங்கினார். இதற்காக வட்டி ரூ.2 ஆயிரம் 3 மாதங்கள் கொடுத்துள்ளார்.

இருப்பினும் ரகு மீதம் உள்ள தொகையை குறிப்பிட்டு அதற்கும் வட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இந்த கந்து வட்டி தொடர்பாக ஜெயசந்திரன் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரகு மீது கந்து வட்டி தடை சட்டம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிதி நிறுவனர்

ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (38). நிதி நிறுவன தொழில் செய்து வருகிறார். இவர் பெங்களூரு அத்திப்பள்ளியை சேர்ந்த சிவப்பரெட்டி என்பவரிடம் சில சொத்து ஆவணங்களை கொடுத்து ரூ.2 கோடியே 79 லட்சத்து 50 ஆயிரம் கடந்த 2018-ம் ஆண்டு கடனாக பெற்றார். இதற்காக அசல் தொகை, வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.7 கோடியே 85 லட்சத்து 82 ஆயிரத்து 500 யுவராஜ் கொடுத்தாக கூறப்படுகிறது.

அதன் பிறகு அவர் கொடுத்த சொத்து ஆவணங்களை திரும்ப கேட்டபோது சிவப்பரெட்டி மேலும் ரூ.5 கோடி தர வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இது குறித்து யுவராஜ் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சிவப்பரெட்டி மீது கந்து வட்டி தடை சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவன்-மனைவி

போச்சம்பள்ளி தாலுகா கவுண்டனூர் அருகே உள்ள கோடிபதியை சேர்ந்தவர் அம்பிகா (50). இவர் அதேபகுதியை சேர்ந்த இளவரசன் (38), அவரது மனைவி சித்ரா (32) ஆகியோரிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வட்டிக்கு கடனாக வாங்கினார். இதற்காக வட்டியாக ரூ.1 லட்சம் வரையில் அம்பிகா கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இளவரசனும், அவரது மனைவி சித்ராவும், மேலும் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் தர வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இது குறித்து அம்பிகா மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் இளவரசன், அவரது மனைவி சித்ரா ஆகியோர் மீது கந்து வட்டி தடை சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story