கார்கள் திருடியதாக 4 பேர் மீது வழக்கு


கார்கள் திருடியதாக 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 March 2023 7:30 PM GMT (Updated: 2 March 2023 7:30 PM GMT)
சேலம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 70). அவருடைய தம்பி சங்கர். இவர் கடந்த 2020-ம் ஆண்டு சேலம் அழகாபுரம் செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த சங்கர் (46) உள்ளிட்ட சிலருடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதற்கிடையே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் குணசேகரன் தம்பி சங்கர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதற்கிடையே சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் குணசேகரன் கொடுத்த புகார் மனுவில், தனக்கு சொந்தமான 2 காரை செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த சங்கர் உள்பட 4 பேர் திருடி சென்று விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து குணேசகரன் சேலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் குணசேகரன் புகார் மனு மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதாவது, செட்டிச்சாவடியை சேர்ந்த சங்கர், ஓமலூர் பகுதியை சேர்ந்த குணசேகரன், ரெயில் நகரை சேர்ந்த மாணிக்கம், சென்னையை சேர்ந்த ரகுபதி ஆகியோர் மீது அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story