'சீல்' வைத்த கடைகளின் பூட்டை உடைத்த 4 பேர் மீது வழக்கு


சீல் வைத்த கடைகளின் பூட்டை உடைத்த 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 12 Feb 2023 6:45 PM GMT)

நாகா்கோவில் அப்டா மார்க்கெட்டில் ‘சீல்’ வைத்த கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகா்கோவில் அப்டா மார்க்கெட்டில் 'சீல்' வைத்த கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடைகளுக்கு 'சீல்'

நாகர்கோவில் ஒழுகினச்சேரி பகுதியில் அப்டா மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதனை விளை பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து நடத்தி வருகிறார்கள். இந்த சங்கத்தின் விதிமுறைப்படி கடையை எடுத்தவர்கள் அதை நடத்த முடியாவிட்டால் மீண்டும் சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பேயன்குழி பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது48) என்பவர் அப்டா மார்க்கெட்டில் 4 கடைகளை வாடகைக்கு எடுத்து, அதில் டீக்கடைகள் மற்றும் ஓட்டல்கள் நடத்தி வந்தார். பின்னர் அந்த கடைகளை வேறு ஒரு நபரிடம் மறுவாடகைக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் அந்த 4 கடைகளுக்கும் நிர்வாகிகள் 'சீல்' வைத்தனர்.

4 பேர் மீது வழக்கு

இந்த நிலையில் சம்பவத்தன்று ஒரு கும்பல் 'சீல்' வைக்கப்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கடைகளில் இருந்து பொருட்களை சேதப்படுத்தியது. இதுதொடர்பாக அப்டா மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் பால்ராஜ் தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியதாக நாகராஜன், ஈத்தாமொழியை சேர்ந்த அய்யப்பன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

----


Next Story