போஸ்டர் ஒட்டிய 5 நிறுவனங்கள் மீது வழக்கு
கோவையில் மேம்பால தூண்களில் போஸ்டர் ஒட்டிய 5 நிறுவனங்கள் மீது மாநகராட்சி புகாரால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை
கோவையில் மேம்பால தூண்களில் போஸ்டர் ஒட்டிய 5 நிறுவனங்கள் மீது மாநகராட்சி புகாரால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேம்பால தூண்களில் போஸ்டர்
கோவையில் அவினாசி ரோடு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 300-க்கும் மேற்பட்ட தூண்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த தூண்களில் சமீப காலமாக அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டு வந்தன. நகரின் பல்வேறு மேம்பால தூண்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனை தடுக்க மேம்பால தூண்களில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. இருந்தாலும் போஸ்டர் ஒட்டுவது குறைந்தபாடில்லை. இது மாநகரின் அழகை கெடுப்பதோடு வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இருந்து வந்தது. இதனால் தூண்களில் போஸ்டர்கள் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் எச்சரித்து இருந்தார்.
5 நிறுவனங்கள் மீது வழக்கு
இந்தநிலையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் ஜெயலட்சுமி, பீளமேடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், கோவை நவ இந்தியா பகுதியில் இருந்து கோல்டு வின்ஸ் வரை சாலையில் புதிய மேம்பாலத்தின் தூண்களில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து போலீசார் தி கோவை ஹெரால்டு, தி கோவை மெயில், ஷைன் ஐ.ஏ.எஸ். அகாடமி, புரொபென்னா டெக்னாலஜிஸ், ரெட் டேக்ஸி ஆகிய 5 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரி புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.