தனியார் நிறுவன ஊழியர் உள்பட 6 பேர் மீது வழக்கு
துடியலூர் அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை கொடுத்ததாக தனியார் நிறுவன ஊழியர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
துடியலூர்
துடியலூர் அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை கொடுத்ததாக தனியார் நிறுவன ஊழியர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வரதட்சணை கொடுமை
கன்னியாகுமரி மாவட்டம் பொன்னப்பநகர் பகுதியை சேர்ந்தவர் சிஜூ (வயது 37). இவருக்கும் கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் சிவாஜிகாலனியை சேர்ந்த தாரண்யா (35) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது பெண் வீட்டார் 80 பவுன் நகைகளும், ரூ.2 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது. ஆனாலும் சிஜூ மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து தாரண்யாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
ெதாழில் தொடங்க ரூ.10 லட்சம்
இந்த நிலையில் சிஜூ தொழில் தொடங்குவதாக கூறி தாரண்யா பெற்றோரிடம் ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் தொழில் தொடங்க ரூ.9 லட்சத்து 96 ஆயிரம் கொடுத்து இருந்தனர்.
இந்த பணத்தை தாரண்யாவின் பெற்றோர் திரும்பி கேட்டுள்ளனர். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் சிஜூ, அவரது தந்தை வேதமுத்து, தாயார் சுசிலா, தம்பி ரிஜி மற்றும் உறவினர்கள் டிம்ப், மஞ்சு ஆகியோர் சேர்ந்து தாரண்யா மற்றும் அவரது பெற்றோருக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
6 பேர் மீது வழக்கு
இதுகுறித்து தாரண்யா துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கிலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, சிஜூ, அவரது தந்தை வேதமுத்து, தாயார் சுசிலா உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் மீது வரதட்ணை கொடுமை, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.