அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு ரூ.25,000 அபராதத்துடன் தள்ளுபடி
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு ரூ.25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை
உள்கட்சி மோதலில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் உறுப்பினரும், ஜே. ஜே. கட்சியின் நிறுவனர் பி. ஏ. ஜோசப் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 5000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 11ம் தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். இதன் காரணமாக இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் ரூ.25,000 அபராதம் விதித்து உள்ளனர். விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கண்டித்தனர்.