அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு - இன்று ஐகோர்ட்டில் விசாரணை!
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டு நடைபெறவுள்ளது.
சென்னை,
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது.
இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால்,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார்.அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில்,அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னைஐகோர்ட்டு நடைபெறவுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும்,எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்,முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம்,ஜெயக்குமார்,திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.குறிப்பாக,மேல்முறையீட்டு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட 3 கூடுதல் மனுக்களை ஐகோர்ட்டு இன்று விசாரிக்கிறது.
இந்த பரபரப்பான வேளையில்,அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆனால்,இரட்டை தலைமை விவகாரம் சர்ச்சையில் உள்ள நிலையில்,அடுத்த நிலையில் இருக்கும் பொருளாளருக்கு தான் சின்னமும்,கட்சியை வழி நடத்தும் அதிகாரமும் உள்ளது என்றும், பொருளாளரான ஓபிஎஸ் அவர்களின் ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது என்றும்,குறிப்பாக, அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார்.
எனினும்,இந்த பொதுக்குழுவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி அவர்களை நியமனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.