ராகுல்காந்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குறித்து அவதூறு; திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு
ராகுல்காந்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியை அவதூறாக பேசிய திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ராகுல்காந்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியை அவதூறாக பேசிய திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நீதிபதி பற்றி அவதூறு
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சூரத் கோர்ட்டு அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சியினரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதை கண்டித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். மேலும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன், ராகுல்காந்திக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியை காங்கிரஸ் தலைவர் அவதூறாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் மீது 153 பி1 (தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதகமாக செயல்படுதல்), 506- 1 (உயர்அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், நீதிபதியை மிரட்டும் வகையில் பேசிய மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன், அதற்கு கை தட்டி ஆரவாரம் செய்த கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.