'இந்தியா' கூட்டணி கட்சி, பா.ஜ.க.வினர் மீது வழக்கு


இந்தியா கூட்டணி கட்சி, பா.ஜ.க.வினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 Aug 2023 1:45 AM IST (Updated: 26 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் போலீசாருடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்ட ‘இந்தியா' கூட்டணி கட்சி, பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திண்டுக்கல்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 'இந்தியா' கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயில் ரவுண்டானா பகுதியில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியலுக்கு முயன்றதால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி ராஜமாணிக்கம், காங்கிரஸ் நிர்வாகி நேரு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மாயவன் உள்பட 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் கவர்னரை வரவேற்பதற்காக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் பஸ்நிலைய பகுதியில் திரண்டனர். அப்போது உரிய அனுமதி இல்லை என கூறி போலீசார் பா.ஜ.க.வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தியபோது, அவர்கள் போலீசாரை தள்ளிவிட்டு சாலை மறியலுக்கு முயன்றனர். இதனால் பா.ஜ.க.வினர், போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ் உள்பட 124 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story