தாரமங்கலம் அருகே தந்தையை அடித்து விரட்டிய மகன், மருமகள் மீது வழக்கு


தாரமங்கலம் அருகே  தந்தையை அடித்து விரட்டிய மகன், மருமகள் மீது வழக்கு
x

தாரமங்கலம் அருகே தந்தையை அடித்து விரட்டிய மகன், மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

தாரமங்கலம்,

முதியவர் போலீசில் புகார்

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கோணகப்பாடி கிராமம் போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 80). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகன்கள், மகளுக்கு திருமணம் ஆகி அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சந்திரனின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டதால் போத்தனூரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் முதியவர் சந்திரன் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு எனது இளைய மகன் ராஜ்மோகன், மருமகள் தங்கமலர் ஆகியோர் 2 பேரக்குழந்தைகளுடன் எனது வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லாத நிலையில் சிறிது நாள் என்னுடன் தங்கி கொள்வதாக கூறி வீட்டில் வசித்து வந்தனர்.

வீட்டை விட்டு விரட்டினர்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக எனது இளைய மகன் ராஜ்மோகன், சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்து வந்தான். கடந்த 20-ந் தேதி மகன் ராஜ்மோகனும், மருமகள் தங்கமலரும் சேர்ந்து என்னை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டனர். இதனால் நான் விரக்தி அடைந்துள்ளேன். எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறேன். எனது மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் சந்திரனின் மகன் ராஜ்மோகன், மருமகள் தங்கமலர் ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் தாரமங்கலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story