ரூ.12½ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு


ரூ.12½ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு
x

வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோயம்புத்தூர்

வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலை வாங்கி தருவதாக கூறி...

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா சாலிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 33). தனியார் வங்கி ஊழியர். இவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான் இணையதளம் மூலம் வேலை வாய்ப்பு தேடினேன். அப்போது கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் இயங்கி வந்த கன்சல்டன்சி நிறுவனம் குறித்த தகவல் கிடைத்தது. இந்த நிறுவனம் மூலம் அரசு வேலைக்கு முயற்சி செய்தேன். அப்போது இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெரியநாயக்கன்பாளையம் அண்ணாநகரை சேர்ந்த சுபாஷினி (25), கரூரை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 2 பேரும் என்னை தொடர்பு கொண்டனர்.

அப்போது அவர்கள் 2 பேரும் டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினர். இதனை நம்பிய நான் அவர்களிடம் ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் பணம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் என்னிடம் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை.

ரூ.12½ லட்சம் மோசடி

இதுகுறித்து அவர்களிடம் பல முறை கேட்டும் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் எனக்கு பணத்தை திருப்பி தரவில்லை, வேலையும் வாங்கி தரவில்லை. எனவே என்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறிய அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தது.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் வாழமரகோட்டையை சேர்ந்த சுந்தரேசன் (28) அளித்த புகார் மனுவில், கோவை கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிபுரிந்த சுபாஷினி, அசோக்குமார் ஆகிய 2 பேரும் என்னிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினர். இதனை நம்பிய நான் அவர்களிடம் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் பணம் வழங்கினேன். ஆனால் அவர்கள் கூறியபடி எனக்கு வேலை வாங்கி தராமல், பணத்தை ஏமாற்றி விட்டனர். எனவே எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று இருந்தது.

சுபாஷினி, அசோக்குமார் ஆகியோர் மேற்கண்ட 2 பேரிடம் இருந்து ரூ.12½ லட்சம் மோசடி செய்துள்ளனர்.

பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு

இந்த 2 புகார்களின் பேரில் சுபாஷினி மற்றும் அசோக்குமார் ஆகியோர் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story