தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய 4 பேர் மீது வழக்குகைது செய்ய நடவடிக்கை


தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய 4 பேர் மீது வழக்குகைது செய்ய நடவடிக்கை
x

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தியை பரப்பிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கட்டுமான தொழில் முதல் தள்ளுவண்டி கடை வியாபாரம் வரையில் பீகார், மேற்கு வங்காளம் போன்ற வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. வேறு சில மோதல் சம்பவங்களின் 'வீடியோ' காட்சிகளை தவறாக இணைத்து இப்படி பொய்யான தகவல் பரவியதால் வடமாநில தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். அவர்களில் பலர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறவும் தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான 'வீடியோ' விவகாரம் பீகார் சட்டசபையிலும் எதிரொலித்தது. இதுதொடர்பாக நேரில் ஆராய்வதற்கு அந்த மாநில அரசு அனைத்து கட்சி குழுவை அமைத்துள்ளது.

இதற்கிடையே, "சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தாக்குதல் வீடியோ பதிவுகள் வதந்தி ஆகும். எனவே வடமாநில தொழிலாளர்கள் இதனை நம்ப வேண்டாம்" என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்தி மொழியில் சமூக வலைத்தளங்களில் பதிவு வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிக்கை வாயிலாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய் செய்தி பரப்பியது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான, பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது.

பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள். வதந்தி பரப்பியது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் டைனிக் பாஸ்கர் பத்திரிகையின் ஆசிரியர், திருப்பூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் 'தன்வீர் போஸ்ட்' என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர், தூத்துக்குடி சென்டிரல் போலீஸ் நிலையத்தில் பிரசாந்த் உமாராவ், கிருஷ்ணகிரி மாவட்டம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சுபம் சுக்லா என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 4 பேரை கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாழும் புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் எந்தவித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள்.

அமைதியை சீர்குலைத்து பதற்றம் ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் போலீஸ்துறையால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது போலீஸ்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இவ்வாறு வதந்தி பரப்பி கைது நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story