ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை,
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து மும்பையை தலைமையிடமாக கொண்ட ஆல் இந்தியா கேமிங் ஃபெடரேஷன் என்ற அமைப்பு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "ஆன்லைன் விளையாட்டுகளை 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் வழங்கக் கூடாது என்று நிபந்தனை உள்ளது. மேலும் ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடுதான் விளையாட்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி மற்றும் போக்கர் போன்ற திறமையான விளையாட்டுகளை சூதாட்டம் எனக் கூறி தடை செய்ததை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்து உத்தரவிட்டது. தற்போது மீண்டும் ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
போக்கர் மற்றும் ரம்மி ஆகியவை திறமைக்கான விளையாட்டுகள். இதில் திறமையான வீரர்கள் வெற்றி பெறுவார்கள். 1957-ம் ஆண்டு மேற்கு வங்க சூதாட்டம் மற்றும் பரிசுப் போட்டிகள் சட்டம் 'கேமிங் அல்லது சூதாட்டம்' என்ற வரையறையிலிருந்து போக்கரை விலக்கியுள்ளது. 2009-ல் சிக்கிம் அரசு ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை விதிகள் போக்கர் மற்றும் ரம்மியை உரிமத்தின் கீழ் விளையாட அனுமதிக்கின்றன.
நாகாலாந்து அரசு போக்கர் மற்றும் ரம்மியை திறமைக்கான விளையாட்டுகளாக வகைப்படுத்தியுள்ளன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் போக்கர் மற்றும் ரம்மியை திறமைக்கான விளையாட்டுகளாகக் கருதுகின்றன. அதை பந்தயம் மற்றும் சூதாட்டத்தின் எல்லைக்கு வெளியே வைத்துள்ளன. மற்ற மாநிலங்களின் சட்டங்கள் மற்றும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் கொண்டு வரப்பட்டுள்ள ஆன்லைன் தடை அவசர சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்ரவரத்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.