ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து, அதை நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தது. நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த அந்த மசோதா மீது சில விளக்கங்களைக் கேட்டு அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார்.
எனவே அந்த சட்ட மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைத்தது. இதுவும் சில நாட்கள் கிடப்பில் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து மசோதாவை சட்டமாக்கி உடனடியாக அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. தற்போது அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அதை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு தடை விதிக்கக்கோரியும், அவரச வழக்காக விசாரிக்கக்கோரியும் முறையிடப்பட்டது. அப்போது மனுக்கள் நடைமுறைகள் முடிந்தால் வழக்கு நாளை பட்டியலிடப்படும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், கலைமதி அமர்வு அறிவித்துள்ளது.