பெண் குழந்தையை விற்றதாக வழக்கு:தாய் உள்பட 2 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
பெண் குழந்தையை விற்றதாக வழக்கில் தாய் உள்பட 2 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்தவர் ராஜாத்தி (வயது 32). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளன. பின்னர் 2-வதாக பாலமுருகன் என்பவரை திருமணம் செய்தார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் கணவருக்கு பிறந்த பெண் குழந்தையை 2-வது கணவருடன் சேர்ந்து வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு விற்பனை செய்துள்ளனர்.
ஆனால் அழகர்கோவிலில் காதணி விழா நடத்தி, தாரை வார்ப்பதாக தம்பதியிடம் பணம் வாங்கிக்கொண்டு குழந்தையை கொடுத்துவிட்டனர். பின்னர் பேசிய தொகையை தராததால், அதிருப்தி அடைந்த ராஜாத்தி, தன் குழந்தையை காணவில்லை என மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதுதொடர்பான விசாரணையின்போது குழந்தையை விற்ற சம்பவம் போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட ராஜாத்தி, அவரது 2-வது கணவர் பாலமுருகன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக மனுதாரர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இதுகுறித்து அவர்களிடம் போலீசார் காவலில் விசாரிக்க வேண்டியது அவசியம். எனவே மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் அனுமதிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.