நகைக்கடன் தள்ளுபடி செய்ய லஞ்சம்:கூட்டுறவு சங்க செயலாளர் மீது வழக்குப்பதிவு


நகைக்கடன் தள்ளுபடி செய்ய லஞ்சம்:கூட்டுறவு சங்க செயலாளர் மீது வழக்குப்பதிவு
x

நகைக்கடனை தள்ளுபடி செய்ய லஞ்சம் வாங்கியதாக பேளுக்குறிச்சி கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

நகைக்கடன் தள்ளுபடி

நாமக்கல் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கர்ணன், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகில் உள்ள பேளுக்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் துணை செயலாளராக 1.6.2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த கோவிந்தராஜூ (வயது55) என்பவர், 2021-ம் ஆண்டு முதல் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில், 5 பவுனுக்கு கீழ் தங்கநகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு, கடன் முழுமையாக தள்ளுபடி செய்து கடந்த 2021-ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 47,618 பேர் இந்த நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். பேளுக்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் மொத்தம் 311 நகைக்கடன் தாரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக கணக்கிடப்பட்டனர்.

ரூ.1,500 லஞ்சம்

இந்த நிலையில் கடந்த 28.3.22 அன்று சங்கத்தில் செயலாளராக (பொறுப்பு) பணியாற்றிய கோவிந்தராஜூ, சங்கத்தின் உறுப்பினர் யுவராணி என்பவரிடம் தனக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால், அவரது பெயரில் 29.1.2021 தேதியில், 30 கிராம் தங்க நகையை வைத்து பெறப்பட்ட ரூ.89 ஆயிரம் நகைக்கடனை தள்ளுபடி செய்து தருவதாக கூறி உள்ளார். மேலும் அதே சங்கத்தில் நகைக்கடன் பெற்றிருந்த கீர்த்தனா, சீனிவாசன், சந்திரா, பெருமாள், சிலம்பரசன் ஆகியோரிடமும், நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், கந்தசாமி என்பவரிடம் நகைக்கடன் தள்ளுபடி செய்ய கடந்த 28.3.22 அன்று ரூ.1,500 லஞ்சமாக பெற்று உள்ளார்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதையடுத்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி, கோவிந்தராஜூ மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story