ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வே.ரா. மறைவு காரணமாக இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 27-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் 77 பேர் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த கோரிய சுயேட்சை வேட்பாளர் கண்ணன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கண்ணன் தாக்கல் செய்த மனுவில், "ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகம் தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்தேன். அந்தப் புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்குகள் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பணப் பட்டுவாடா புகாரை பொறுத்தவரை, எந்த தேதியில், யார் பணம் கொடுத்தார்கள், பெற்றார்கள் என்பது தொடர்பான விவரங்கள் இல்லை. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால் அவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, தேர்தலை நிறுத்தக் கோரி கண்ணன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர் ரவி தொடர்ந்த வழக்குகளில், அதிமுக தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுதாரர்களின் புகார்களை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்குகளை முடித்துவைத்தனர்.


Next Story