பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதல்கள்; ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு


பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதல்கள்; ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
x

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுப் பள்ளி மாணவனை, சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மாணவனின் தங்கைக்கும் படுகாயம் ஏற்பட்ட நிலையில், இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது போன்ற சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறாமல் இருப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, தேவையான பரிந்துரைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு 6 மாதங்களுக்குள் இது தொடர்பான பரிந்துரை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்களைப் பெற்று அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சாதி, இன மோதல் தொடர்பான வழக்குகளில் கைதாகி விடுதலையான சிறுவர்களிடம் கலந்துரையாடி மோதலுக்கான காரணங்களை கேட்டுப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அலுவலகம் சென்னை மயிலாப்பூரில் இயங்கும் என்றும், வருங்காலத்தில் கல்வி நிலையங்களில் இணக்கமான சூழல் நிலவ தேவையானவற்றை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு உடனடியாக இது தொடர்பான விசாரணையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




Next Story