நெல்லையில் மாடுகளை பிடித்து பொது ஏலம்; வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நெல்லை மாநகரில் நேற்று 2-வது நாளாக மாடுகளை பிடித்து பொது ஏலம் விடப்பட்டது. அப்போது வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாநகரில் நேற்று 2-வது நாளாக மாடுகளை பிடித்து பொது ஏலம் விடப்பட்டது. அப்போது வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாடுகளை பிடித்து ஏலம்
நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே மாடுகளை பிடித்து அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அவற்றை ஏலம் விடுமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அந்த நடைமுறை நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது.
நேற்று முன்தினம் மேலப்பாளையம் மண்டலத்தில் 15 மாடுகள் பிடிக்கப்பட்டு அவை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வைத்து ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் வருவாய் கிடைத்தது.
2-வது நாள் பணி
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மண்டல உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாட்ஷா மேற்பார்வையில் மாநகராட்சி பணியாளர்கள் மாடுகளை பிடித்து மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி அருகே உள்ள தண்ணீர் தொட்டி வளாகத்தில் கொண்டு வந்து அடைத்தனர்.
பின்னர் அந்த மாடுகளை ஏலம் விடப்படுவதாக அறிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் அங்கு வந்து முற்றுகையிட்டனர். அப்போது உதவி ஆணையாளர், மாடுகளின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தீக்குளிக்க முயற்சி
அப்போது ஒரு வாலிபர் தனது மாடு ஏலம் விடப்பட்டதை கண்டித்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வாலிபரை மடக்கி பிடித்து தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாடு வளர்ப்போர் அதிகாரிகளிடம் கூறுகையில், தங்களது மாடுகள் தெருக்களில் தான் சுற்றித்திரிந்தது, சாலைகளில் நாங்கள் விடவில்லை. மேலும் நீங்கள் பிடித்து வந்திருப்பது அனைத்தும் பசு மாடுகள். எனவே அவைகளை ஏலம் விடாமல், அபராதத்தொகை மட்டும் விதித்து எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.
முற்றுகை போராட்டம்
இந்தநிலையில் பாளையங்கோட்டை பகுதியில் பிடிபட்ட 11 மாடுகளை பாளையங்கோட்டை குடிநீர் தொட்டி அருகே அடைத்து வைத்திருந்தனர். இதில் பாளையங்கோட்டையை சேர்ந்த வீரமணி என்பவருடைய மாடு கன்று ஈன்றது. இந்தநிலையில் பா.ஜனதா கட்சியினர் மாவட்ட தலைவர் தயா சங்கர், பொதுச் செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மாடுகள் திறந்து விடப்பட்டன. இதனை தொடர்ந்து பா.ஜனதா கட்சியினர், பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். மாடுகளை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
பாளையங்கோட்டையை சேர்ந்த வீரமணி, தனது மாட்டை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்துச் சென்று தீவனம் போடாமல் பட்டினி போட்டிருந்தனர். எனவே அவர்கள் மீது மிருகவதை தடை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார்.