கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபாரதம்
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிந்தால், அதன் உரிமையாளர் அபாரதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படுத்தும் வகையில் கால்நடைகளை சாலைகளில் சுற்றி திரிந்தால், அதன் உரிமையாளர் அபாரதம் விதிக்கப்படும் என கலெக்டர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறத்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கால்நடை
திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகபகுதிகளில் பொது இடங்களிலும், சாலைகளிலும் சுற்றி திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்ப்போர், அவற்றை பொது இடங்களில் நடமாடவிடாமல் அவர்களது குடியிருப்பு பகுதியிலேயே அடைத்து வைத்திருக்க வேண்டும்.கால்நடைகள் பொது இடங்களிலும், சாலைகளிலும் காணப்பட்டால் அவற்றை பிடித்து தங்கள் பொறுப்பில் ஓரிடத்தில் அடைத்து வைக்க நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கும், போலீஸ் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடைத்து வைக்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் உரிய அபராத தொகை செலுத்திய பின்பே கால்நடைகளை மீட்டு செல்ல இயலும்.
அபராத தொகை
3 நாட்களுக்கு மேல் உரிய அபராத தொகை செலுத்தி மீட்டு செல்லாத கால்நடைகளை கோ சாலைகளில் ஒப்படைக்கப்படும். எனவே திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை பொதுஇடங்களிலும், சாலைகளிலும் நடமாடவிடாமல், பொதுமக்களுக்கு கால்நடைகளால் எவ்வித இடையூறும் ஏற்படாதவகையில், தங்கள் குடியிருப்பு பகுதியிலேயே அடைத்து வைத்துக் கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது.இந்த அறிவிப்பினை மீறி கால்நடைகளை பொதுவெளியில் விடுபவர்கள் அபராத தொகை செலுத்த நேரிடுவதோடு சட்டப்படியான நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.