சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும்


சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும்
x

நாகை, நாகூர் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்


நாகை, நாகூர் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகர்மன்ற கூட்டம்

நாகை நகர்மன்றத்தின் மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். பொறியாளர் ஜெயகிருஷ்ணன் வரவேற்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பேசியதாவது:- பரணிகுமார் (அ.தி.மு.க): நாகை நகராட்சியில் இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிரமம் உள்ளது.

நோட்டீஸ்

மணிகண்டன்(அ.தி. மு.க.):- எனது வார்டுக்குட்பட்ட தர்ம கோவில் தெரு, பாரதி மார்க்கெட் சாலையை சீரமைக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் தேவையில்லாமல் கால்நடைகளை விடக்கூடாது என உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்.

ஸ்ரீதேவி(ஆணையர்):- கால்நடைகளை பிடிப்பதற்கு முன்பு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்படுகிறது. நகராட்சி சார்பில் வாகனங்களில் அறிவிப்பு செய்யப்படுகிறது. அதன்பின்னர் தான் கால்நடைகள் பிடிக்கப்படுகிறது.

கால்நடைகளை பிடிக்க வேண்டும்

மாரிமுத்து(தலைவர்):- கால்நடைகளால் நகர பகுதியில் அதிகளவு விபத்துகள் நடந்து வருகிறது. கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் இதனை கட்டுப்படுத்த முடியும். எனவே நகர பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதில் எவ்விதமான தளர்வும் இல்லை.

செந்தில்குமார் (துணைத்தலைவர்):- நாகை, நாகூர் பகுதியில் அதிக அளவில் கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகிறது. இந்த கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்காலிக கழிவறை

துப்புரவு ஆய்வாளர்:- கால்நடைகளை பிடிப்பது சம்பந்தமாக நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் அறிவிப்பு விடப்பட்டுள்ளது.

சுரேஷ் (தி.மு.க):-நம்பியார் நகரில் கடல் அரிப்பு காரணமாக மின்கம்பங்கள் விழுந்துள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

பதூர் நிஷா (தி.மு.க.):- நாகூர் யானை கட்டி முடுக்கு சந்தில், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். நாகூரில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க வேண்டும்.

பன்றிகள் தொல்லை

ஸ்ரீதேவி (ஆணையர்):-நாகூர் சில்லடி தர்கா, மாடர்ன் பள்ளி, குப்பை மறுசுழற்சி மையம் உள்ளிட்ட 3 இடங்களில் தற்காலிக கழிவறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கலா (தி.மு.க.):-நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனை உடனடியாக பிடிக்க வேண்டும். அவர்கள் அவர் கூறினர்.

முடிவில் துணைத் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


Next Story