சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு 8 மணி நேரம் குறுக்கு விசாரணை


சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு 8 மணி நேரம் குறுக்கு விசாரணை
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு 8 மணி நேரம் குறுக்கு விசாரணை நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் விசாரணை நடந்து வருவதால் இவ்வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகினார். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி நேரில் ஆஜரானார். அவரிடம் ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணையை முடித்த நிலையில் நேற்று முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்தனர். காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், அதன் பிறகு மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் என 8 மணி நேரமாக குறுக்கு விசாரணையை நடத்தி முடித்தனர். இதன் விவரங்களை நீதிபதி புஷ்பராணி பதிவு செய்துகொண்டார். இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை 13-ந் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்த நீதிபதி புஷ்பராணி, அன்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகள் வேறு யாரேனும் இருந்தால் விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.

1 More update

Next Story