சி.பி.சி.ஐ.டி. போலீசில் சேலம் தனபால் நேரில் ஆஜர்


சி.பி.சி.ஐ.டி. போலீசில் சேலம் தனபால் நேரில் ஆஜர்
x
தினத்தந்தி 15 Sept 2023 2:30 AM IST (Updated: 15 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசில் சேலம் தனபால் நேரில் ஆஜரானார். அவரிடம் போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

கோயம்புத்தூர்

கோவை


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசில் சேலம் தனபால் நேரில் ஆஜரானார். அவரிடம் போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார்.


வழக்கு தொடர்பான தகவல் தெரிந்து இருந்தும் அதை மறைத்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


8 மணி நேரம் விசாரணை


இதற்காக 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கார் டிரைவர் கனகராஜின் அண்ணனான சேலத்தை சேர்ந்த தனபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.

அவர் நேற்று காலை 10 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.


காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணிக்கு முடிந்தது. 8 மணி நேரம் நடந்த விசாரணையில் தனக்கு தெரிந்த பல்வேறு விஷயங்களை போலீசாரிடம் தனபால் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து வருகிற 26-ந் தேதி மீண்டும் அவரை ஆஜராக போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டார்.


முன்னதாக தனபால் நிருபர்களிடம் கூறியதாவது:-


தயாராக இருக்கிறேன்


கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. பிரமுகர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். எனது தம்பி சாவில் மர்மம் இருக்கிறது. தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து வருவதால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


தடயங்களை அழித்ததாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. நான் எந்த தடயங்களையும் அழிக்கவில்லை. தற்போது எனக்கு எவ்வித மிரட்டலும் இல்லை.

இந்த வழக்கில் உண்மையை வெளியே சொல்லக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எனக்கு ரூ.2 ஆயிரம் கோடி தருவதாக பேரம் பேசினார்கள். எனவே நான் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்.

எனக்கு தெரிந்த அனைத்து உண்மைகளையும் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்.


இவ்வாறு அவர் கூறினார்.



Next Story