கைதான பேராசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை


கைதான பேராசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
x

மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவருடைய மடிக்கணினி, செல்போனை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்தவர் சுகிர்தா (வயது 27). தூத்துக்குடியை சேர்ந்த இவர், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்தநிலையில் அவர் கடந்த 6-ந் தேதி கடிதம் எழுதி வைத்து விட்டு விடுதி அறையில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த கடிதத்தில், கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஹரீஷ், மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் தொந்தரவு கொடுத்ததாகவும் சுகிர்தா குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் 13-ந் தேதியன்று பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி ஆகியோர் கல்லூரியில் விசாரணையை தொடங்கினர்.

மேலும் சிறையில் இருக்கும் பேராசிரியர் பரமசிவம் மற்றும் முன்ஜாமீன் பெற்றுள்ள ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர். இதற்காக பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுக்க வேண்டி நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்றுமுன்தினம் கோர்ட்டில் நடந்தது. இதற்காக பாளையங்கோட்டை சிறையில் இருந்து பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். அப்போது மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி, பேராசிரியர் பரமசிவத்தை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி அவரை விசாரணைக்காக தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரிடம் இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை காண்பித்து விசாரித்தனர். ஆனால் பேராசிரியர் பரமசிவம், தனக்கும், இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறியதாக தெரிகிறது. நேற்று காலையில் பேராசிரியர் பரமசிவத்தை மருத்துவக்கல்லூரி, அவர் தங்கியிருந்த கல்லூரி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றும் விசாரணை நடத்தப்பட்டது.

அதே சமயத்தில் பேராசிரியரின் மடிக்கணினி, செல்போன், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பேராசிரியர் பரமசிவத்தை நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டமாக பயிற்சி மாணவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விசாரணைக்கு ஆஜராகும்படி 2 பேருக்கும் சம்மன் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1 More update

Next Story