ராஜஸ்தான் மாநிலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரம வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறாா்கள்
விழுப்புரம்
பாலியல் வன்கொடுமை
விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்புஜோதி என்ற ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் அடித்து துன்புறுத்தப்பட்டது, அங்கிருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, ஆசிரமத்தில் இருந்த சிலர் மாயமானது என்பன போன்ற அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் வயது முதிர்வு காரணமாக தாஸ் என்பவரை போலீசார் சிறையில் அடைக்கவில்லை என கூறப்படுகிறது.
உடல் உறுப்பு எடுக்கப்படவில்லை
இந்த நிலையில் அன்புஜோதி ஆசிரம சம்பவம் குறித்த விசாரணை தற்போது எந்த கட்டத்தில் உள்ளது என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கேட்டபோது, ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்களில் யாரிடமும் உடல் உறுப்பு எடுக்கப்படவில்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் ஆசிரமத்துக்கு வெளிநாடுகளில் இருந்து எவ்வித நிதியும் கடந்த சில ஆண்டுகளாக வரவு வைக்கப்படவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது. குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்தவர்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்தும், வெளிமாநிலங்களில் இருந்து குண்டலப்புலியூர் ஆசிரமத்திற்கு வரவழைத்ததும் ஏன்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்.
ராஜஸ்தான் மாநிலத்தில்
பெங்களூரு ஆசிரமத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டலப்புலியூரில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டு பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் விடப்பட்டவர்களில் காணாமல்போன இன்னும் சிலரைப்பற்றியும் விசாரணை செய்து வருகிறோம். அனைத்து விசாரணைகளும் முடிவடைய இன்னும் ஒரு மாதம் தேவைப்படும். அதன் பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள தாசை தவிர மீதமுள்ள 8 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.