சி.பி.ஐ. விசாரணைக்கு பயந்து ஆதிவாசி தற்கொலை
யானை தந்தம் கடத்தல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பயந்து ஆதிவாசி நபர் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்,
யானை தந்தம் கடத்தல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பயந்து ஆதிவாசி நபர் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சி.பி.ஐ. விசாரணை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே செங்கல்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 49). தொழிலாளி. ஆதிவாசியான இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானை தந்தம் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொன்னுசாமி மீது வனத்துறையில் மொத்தம் 7 வழக்குகளும், போலீசில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனால் அவர் விசாரணைக்காக குன்னூர் கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.
இந்தநிலையில் யானை தந்தம் கடத்தல் வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் குன்னூர் அருகே செங்கல்புதூர் கிராமத்துக்கு வந்து பொன்னுசாமியிடம் விசாரணை நடத்தி சென்றனர். இதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு பயந்த அவர் மனஉளைச்சல் அடைந்தார். இதற்கிடையே செங்கல்புதூரில் பொன்னுசாமி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த கொலக்கொம்பை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆதிவாசி மக்கள் போராட்டம்
பிரேத பரிசோதனைக்கு பின்னர் பொன்னுசாமி உடலை வாங்க மறுத்து ஆதிவாசி மக்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ், குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து, ஆதிவாசி மக்கள் பொன்னுசாமி உடலை வாங்கி சென்றனர். சி.பி.ஐ. விசாரணைக்கு பயந்து ஆதிவாசி நபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.