சி.பி.ஐ. அதிகாரி போல நடித்து பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி


சி.பி.ஐ. அதிகாரி போல நடித்து பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் சி.பி.ஐ. அதிகாரி போல நடித்து பெண்ணிடம் ரூ.1.62 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் சி.பி.ஐ. அதிகாரி போல நடித்து பெண்ணிடம் ரூ.1.62 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சி.பி.ஐ. அதிகாரி

நாகர்கோவில் மேலராமன்புதூரை சேர்ந்தவர் அழகேஷ்வரன். இவருடைய மனைவி உதிரா தேவி (வயது32). இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை சி.பி.ஐ. அதிகாரி என்று கூறியுள்ளார். தொடர்ந்து உதிரா தேவியின் குடும்ப விவரங்களை விசாரித்ததோடு கல்வி தகுதி குறித்தும் கேட்டுள்ளார். பின்னர் அவர் பலருக்கும் வேலை வாங்கி கொடுத்து இருப்பதாகவும், உதிரா தேவிக்கும் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

அதன்பிறகு, 'வேலை தயாராக இருக்கிறது. அதற்கு முதற்கட்டமாக ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார். இதை நம்பிய உதிரா தேவி உடனடியாக செல்போன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் அனுப்பினார்.

அதன்பின்பு அந்த நபர், 'இந்த பணம் போதாது. கூடுதலாக ரூ.40 ஆயிரம் வேண்டும்' என்று செல்போன் மூலம் கேட்டுள்ளார். எனினும் கொஞ்சம் கூட சந்தேகம் அடையாத உதிரா தேவி மீண்டும் ரூ.40 ஆயிரம் அனுப்பினார்.

3 பவுன் நகை

இந்த நிலையில் பணம் அனுப்பிய சில நாட்களுக்கு பிறகு உதிரா தேவியின் வீட்டுக்கு வேலை தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி என்று கூறி ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் உதிரா தேவியிடம், 'உங்களுக்கு வேலை தயாராக உள்ளது. எனவே உங்களது சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்' என்று கூறியுள்ளார். தனக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியில் உதிரா தேவி தனது சான்றிதழ்களை கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த வாலிபர், 'புகைப்படம் எடுக்க வேண்டும். எனவே கழுத்தில் அணிந்துள்ள நகையை கழற்றி வையுங்கள்' என்று கூறினார். அந்த வாலிபரின் பேச்சை கேட்டு தான் அணிந்திருந்த 3 பவுன் நகையை கழற்றி மேஜையில் வைத்துள்ளார். அப்போது அந்த வாலிபர் தனக்கு தாகம் எடுப்பதால் தண்ணீர் கொண்டு வரும்படி கூறினார். உடனே உதிரா தேவி தண்ணீர் கொண்டு வருவதற்காக சமையல் அறைக்கு சென்றார்.

போலீசார் விசாரணை

பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது மேஜையில் இருந்த நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை அந்த வாலிபர் எடுத்து சென்றது தெரிய வந்தது. சி.பி.ஐ. அதிகாரி போல நடித்து ரூ.60 ஆயிரம் பணத்தை மோசடி செய்ததோடு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான நகை மற்றும் செல்போனை வீட்டிற்கு வந்து கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உதிரா தேவி நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர்.


Next Story