மருத்துவ மாணவி தற்கொலையில் சி.பி.ஐ. விசாரணை : ராமதாஸ் வலியுறுத்தல்


மருத்துவ மாணவி தற்கொலையில் சி.பி.ஐ. விசாரணை : ராமதாஸ் வலியுறுத்தல்
x

மருத்துவ மாணவி தற்கொலையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன.

மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பது தெளிவாக தெரியும் நிலையில், அவர்களைக் காப்பாற்ற காவல்துறை அதிகாரிகளே துணை போவது கண்டிக்கத்தக்கது.மாணவியின் தற்கொலைக்கு காரணமான மருத்துவக் கல்லூரி பேராசிரியர், சக மாணவி, மாணவர் ஆகிய மூவர் மீதும் வழக்கு மட்டும் தான் பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், காப்பாற்ற அதிகாரிகள் முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.பேராசிரியர் உள்ளிட்ட மூவரும் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 306-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பிரிவின் கீழ் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அதிக அளவாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இது ஜாமீனில் வெளி வர முடியாத குற்றப்பிரிவு ஆகும். இந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. இவை அனைத்துக்கும் மேலாக இந்த வழக்கில் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சேர்க்கப்படவில்லை. அதனால், இந்த வழக்கு நியாயமாக நடக்குமா? என்ற ஐயம் எழுந்துள்ளது.சர்ச்சைக்குரிய மருத்துவக் கல்லூரியில் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது இது முதல் முறையல்ல. ஒரு பரபரப்பான திரைப்படம் தயாரிக்கும் அளவுக்கு அங்கு குற்றங்களும், விதிமீறல்களும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் அங்கு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.முதுநிலை மருத்துவ மாணவி தற்கொலை மட்டுமின்றி, இதற்கு முன் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பங்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். அதற்காக, மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கொடுமைகள் மற்றும் தற்கொலைகள் குறித்து, உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story