மணப்பாறை ஜவுளி வியாபாரியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை


மணப்பாறை ஜவுளி வியாபாரியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை
x

மணப்பாறை ஜவுளி வியாபாரியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.

திருச்சி

ஆபாச வீடியோ

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பூமாலைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 44). பட்டதாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் மீது சிறுமிகள் உள்ளிட்டோரின் ஆபாச வீடியோவை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக புகாரின் அடிப்படையில் இன்டர்போல் அதிகாரிகள் சி.பி.ஐ.க்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்துடெல்லி சி.பி.ஐ. போலீசார் நேற்று முன்தினம் காலை மணப்பாறை போலீசார் உதவியுடன் ராஜாவின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். பின்னர் வீட்டில் இருந்த ராஜாவிடம் விசாரணை நடத்தினர்.

மீண்டும் விசாரணை

இதைத்தொடர்ந்து நேற்று டெல்லி சி.பி.ஐ. போலீசார் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தின் தனி அறையில் ராஜாவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவருக்கு சிறுமிகளின் ஆபாச படங்கள் எங்கிருந்து வந்தன? அவர் எதற்காக அந்த படங்களை வெளிநாட்டிற்கு அனுப்பினார்? அந்த படங்களை அனுப்பியதன் மூலம் வெளிநாட்டு தொகை பெற்றுள்ளாரா? என்பது குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த விசாரணை காலை முதல் மாலை வரை நீடித்தது. தொடர்ந்து இன்றும்(சனிக்கிழமை) விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் தான் முழு தகவல்கள் தெரிய வரும்.


Next Story