ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்


ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
x

ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டப்பட்டது.

திருச்சி

முசிறி:

காவிரி தாயை வணங்கினர்

முசிறியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் புதுமண தம்பதிகள் உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தினருடன் புனித நீராடினர். மேலும் பல வகையான பழங்கள், மஞ்சள் கயிறு, காப்பு அரிசி வைத்து, தேங்காய் உடைத்து, காவிரி தாயை வணங்கி பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் மஞ்சள் கயிற்றை பெண்கள் ஒவ்வொருவர் கட்டிவிட்டனர்.

முசிறி பகுதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில், கன்னிமார் கோவில், மாரியம்மன் கோவில், சிவன் கோவில், குடிப்பாட்டு கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தா.பேட்டை

தா.பேட்டை பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. செவந்தாம்பட்டி ஆற்றுப் பிள்ளையார் கோவிலில் பெண்கள், புதுமண தம்பதிகள், மூத்த பெண்களிடம் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். தா.பேட்டையில் பிள்ளாதுரை பெரியமாரியம்மன் கோவிலுக்கு செவந்தம்பட்டி மதுரைவீரன் சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் சுமந்தும், அக்னி சட்டி ஏந்தியும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.அப்போது பெரியமாரியம்மன், கிராம விநாயகர், சந்திகருப்பு உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. சந்தன காப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மழை வேண்டியும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் ஆடிப்பெருக்கை முன்னிட்டு தா.பேட்டை காசி விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர், செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, பகவதி அம்மன், தேவானூர் ராஜகாளியம்மன், செவந்தாம்பட்டி மதுரைவீரன் சுவாமி, கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழிபாடுகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருவெறும்பூர்

திருவெறும்பூரை அடுத்த வேங்கூர் ஊராட்சி பிரிவு சாலையில் உள்ள பூசத்துறை படிக்கட்டில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காவிரி ஆற்றில் புதுமண தம்பதிகள் மாலைகளை விட்டு, காவிரி தாயை வணங்கினர். மனைவிக்கு கணவர்கள் புதிய மஞ்சள் கயிறு கட்டி சாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த படித்துறையில் திரளான பொதுமக்கள் காவிரித் தாயை வணங்கி, சாமி தரிசனம் செய்தனர். நவல்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிடாக்கள் வெட்டி அன்னதானம்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் சட்டி கருப்பு கோவிலில் நேற்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. இதில், பூனாம்பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விளக்கேற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.

மேலும் சுமார் 250-க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டி, ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும், குற்றங்கள் ஏற்படாமல் தடுக்கவும் இன்ஸ்பெக்டர் ரகுராமன் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்னமுது பெருவிழா

உப்பிலியபுரத்தை அடுத்த புளியஞ்சோலையில் உள்ள தாயம்மாள் உடனுறை ஆதிஅறப்பளீஸ்வரர் கோவிலில் சிவனடியார்களால் ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்னமுது பெருவிழா நடைபெற்றது. உலக சித்தர்கள் திருச்சபை சார்பாக நடைபெற்ற விழாவில் கோமாதா பூஜை, சித்தர்கள் சூட்சம வேள்வி, திருவிளக்கு பூஜை, 108 சங்கு பூஜை, அன்னலிங்க பூஜை முதலான பூஜைகளையடுத்து இன்னமுது படையல் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த சிவனடியார்களிடம் பொதுமக்கள் ஆசி பெற்றனர். ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வளையல் அலங்காரம்

திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் ரோட்டில் நாடார் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. வளையல்களால் ஆன பந்தலும் போடப்பட்டிருந்தது. மேலும் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் செய்து அந்த பகுதி மக்கள் வழிபட்டனர்.


Next Story