ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்


அரியலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலின் முன்பு கொள்ளிடம் ஆறு உள்ளது. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிவரும் கொள்ளிடம் ஆறு கோவிலின் முன்பு வரும்போது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓட ஆரம்பிக்கும். இது இந்த கோவிலின் சிறப்பு அம்சம் ஆகும். மேலும், இந்தக்கோவில் காசிக்கு அடுத்ததாகவும் போற்றப்படுகிறது.இந்தநிலையில் ஆடிப்பெருக்கையொட்டி புதுக்கோட்டை, செம்பியக்குடி, குலமாணிக்கம், இலந்தைகூடம், கண்டிராதித்தம், அரண்மனை குறிச்சி, பாளயபாடி, அண்ணிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த புதுமண தம்பதிகள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் புதுமண தம்பதிகள் கொள்ளிடம் ஆற்றில் குளித்துவிட்டு மணலில் அமர்ந்து காப்பரிசி படையல் போட்டு, தேங்காய், பழம், வளையல், மஞ்சள்கயிறு உள்ளிட்ட பொருட்கள் வைத்து சாமி கும்பிட்டு. மனைவிமார்கள் கட்டியிருக்கும் தாலியை பிரித்து புது மஞ்சள் கயிற்றுடன் கோர்த்து கணவன்மார்கள் அவர்கள் கழுத்தில் மீண்டும் கட்டி விடுவார்கள். பின் படையல் போட்ட பொருட்களை ஆற்றில் வரும் நீரில் விடுவது வழக்கம். மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள சிறுவர்கள் மரத்தாலான தேர் செய்து அதில் சாமி படங்களை வைத்து வழிபட்டு அவர்களின் கிராமத்திலிருந்து நண்பர்களோடு சேர்ந்து தேரை இழுத்து வந்து இந்த கோவிலில் வழிபாடு செய்து தேரை ஆற்றில் வரும் நீரோடு விடுவார். இதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான புதுமண தம்பதிகள் வருகை தந்து வழிபாடுகளை செய்து தாலியை பிரித்து கட்டிக்கொண்டனர். ஆற்றில் நீர் வரத்து சற்று அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பெண்கள் நீர்நிலைகளுக்கு சென்று மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டு ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். அஸ்தினாபுரம், காட்டு பிரிங்கியம், நமங்குனம், காடூர் உள்பட பல்வேறு கிராமங்களில் சிறுவர், சிறுமிகள் பட்டாடை உடுத்தி படத்தேர் தயார் செய்து அதில் தெய்வ சிலைகளை வைத்து வழிப்பட்டு வீதி வீதியாக இழுத்து சென்றனர்.

அரியலூர் பவுண்டு தெருவில் உள்ள வீரபத்திர சாமி கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து மார்க்கெட் தெரு, தேரடி, கைலாசநாதர் கோவில் தெரு வழியாக ஊர்வலமாக வந்து பால் அபிஷேகம் செய்தும், ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர்.


Next Story