ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்


ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

புதுக்கோட்டை

ஆடிப்பெருக்கு விழா

தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக காவிரி கரையோர பகுதி மற்றும் நீர்நிலை கரைப்பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வாழ்வில் வளம்பெறவும், செல்வம் பெருகவும், விவசாயம், தொழில் செழிக்கவும் நதியை வழிபடுவது வழக்கம். அதன்படி இன்று ஆடி மாத 18-ந் தேதியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டையில் சாந்தநாத சாமி கோவில் அருகே உள்ள பல்லவன் குளக்கரையில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. படித்துறையில் வாழை இலை விரித்து, தேங்காய், பழ வகைகள், அச்சுவெல்லம் கலந்த அரிசி, காதோலை கருகமணி, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் வைத்து விளக்கேற்றியும், தீபாராதனை காண்பித்து சுமங்கலி பெண்கள் பூஜை செய்தும் வழிபட்டனர். மேலும் குடும்ப உறுப்பினர்களும் வழிபாடு நடத்தினர்.

மஞ்சள் கயிறு

குடும்பத்தில் உள்ள சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறுகளை கழுத்தில் மூத்த சுமங்கலி பெண்கள் கட்டிவிட்டனர். மேலும் ஆண்களுக்கு கைகளிலும் கட்டிவிட்டனர். திருமணமாகாத பெண்கள் திருமணம் நடைபெற வேண்டி கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். புதுமண தம்பதிகள் வழிபாடு நடத்தி தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை நீரில் விட்டனர்.

இதேபோல சுமங்கலி பெண்கள் சிலர் தாலிசரடுகளை மாற்றி, புதிய கயிறு அணிந்து கொண்டனர். வழிபாடு முடிந்ததும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல ஆடிப்பெருக்கு விழாவையொட்டி அம்மன் கோவில்கள் உள்பட நகரில் உள்ள பிரபல கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கறம்பக்குடி

கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரியில் உள்ள சுகந்த பரமேஸ்வரர் சமேத பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி புதுமணத் தம்பதிகள் கோவில் முன்பு அமைந்துள்ள திருக்குளத்தில் புனித நீராடி தாலி பெருக்கி அணிந்து கொண்டனர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில் மஞ்சள் கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.

இதேபோல் கறம்பக்குடி சிவன் கோவில் குளக்கரையில் ஏராளமான பெண்கள் கும்மி அடித்து காவிரித் தாயை வாழ்த்தி பாடல்கள் பாடி பூஜை செய்து வழிபட்டனர்.

திருவரங்குளம், ஆலங்குடி

திருவரங்குளம் திருக்குளம், நைனாரி குளத்தில் புதுமண தம்பதிகள், உறவினர்கள், நண்பர்களுடன் வந்து தாலி பெருக்கி அணிந்து கொண்டனர். பின்னர் உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டி கொண்டனர்.

திருவுடையார்பட்டி திருமூல நாதர் கோவில், பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆலங்குடி சித்தி விநாயகர் கோவில் செட்டிக்குளக்கரையில் புதுமணத் தம்பதிகள் புனித நீராடி தாலி பெருக்கி அணிந்து கொண்டனர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில் மஞ்சள் கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.

மணமேல்குடி

மணமேல்குடி அருகே வடக்கூர் முத்துமாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதில் பெண்கள் கும்மியடித்து ஒருவருக்கொருவர் மஞ்சள் தடவிய கயிற்றை கட்டிக்கொண்டனர். கீரனூரிலும் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது.

1 More update

Next Story