கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்:தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்:தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தைெயாட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தைெயாட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வால்பாறையில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயங்களில் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. சி.எஸ்.ஐ தேவாலய ஆயர்கள் பால்சுந்தர்சிங், ஜான் வெஸ்லி தலைமையில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் ஆராதனையை நடத்தி அனைவருக்கும் நற்கருணை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். வால்பாறை பகுதியில் உள்ள கத்தோலிக்க தூய இருதய ஆலயம், முடீஸ் புனித அந்தோனியார் ஆலயம், அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலயம், சோலையாறு நகர் புனித சூசையப்பர் ஆலயம் ஆகிய ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் இன்னிசை கீத கொண்டாட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நள்ளிரவு 12.00 மணிக்கு ஆலய மணிகள் ஒலிக்க தூய இருதய தேவாலயத்தில் பங்கு குருக்கள் ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் இருவரும் குழந்தை ஏசு சொரூபத்தை ஆலயத்தில் இருந்து பவனியாக எடுத்து வந்து புல்குடிலில் வைத்து வணங்கினார்கள்.

சிறப்பு திருப்பலி

அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டு பாடல், திருப்பலி நிறைவேற்றி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா கேக் வழங்க ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளில் இருக்கும் பல்வேறு சபைகளின் சார்பில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடத்தி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கர்நாடகா மற்றும் கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலியில் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு பொள்ளாச்சி -பாலக்காடு ரோட்டில் உள்ள புனித லூர்து அன்னை தேவாலயத்தில் ஆலய பங்குத்தந்தை ஜேக்கப் தலைமையில் நள்ளிரவு கூட்டுத் திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதேபோல் பொள்ளாச்சி பகுதியில் உள்ள பல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் ஆலயங்களுக்கு சென்ற கிறிஸ்தவர்கள் அங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.


Next Story