உலக பழங்குடியினர் தின விழா கொண்டாட்டம்
கல்வராயன்மலையில் உலக பழங்குடியினர் தின விழா கொண்டாடப்பட்டது.
கச்சிராயப்பாளையம்
உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மலையாளி பேரவை சங்கம் சார்பில் கல்வராயன்மலை வெள்ளிமலையில் பழங்குடியினர் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பழங்குடியினர் பேரவை சங்க தலைவர் வரதராஜி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மோகன், பொருளாளர் வெள்ளையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராமசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பழங்குடியினர் நல துணை ஆட்சியர் கதிர்சங்கர் கலந்துகொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பழங்குடியினர் மக்கள் வசித்து வரும் கல்வராயன் மலையில் பல ஆண்டு காலமாக விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு வருவாய் துறையினர் மூலம் அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டும், வனத்துறையினர் பொய்வழக்கு போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சங்க நிர்வாகிகள் பேசினர். நிகழ்ச்சியில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பழங்குடியினர் பேரவை சங்க மாநில துணை செயலாளர்கள் சுப்பிரமணி, அருள்குமார், கோவிந்தன், ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.