மதுரையில் நாளை விழா:75 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.180 கோடி கடன் உதவிகள் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
75 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.180 கோடி கடன் உதவிகள் வழங்கும் விழா மதுரையில் நாளை நடக்கிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உதவிகளை வழங்குகிறார்.
75 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.180 கோடி கடன் உதவிகள் வழங்கும் விழா மதுரையில் நாளை நடக்கிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உதவிகளை வழங்குகிறார்.
அரசு நிகழ்ச்சி
மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே உள்ள கலைஞர் திடலில், ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சி நாளை (6-ந் தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார்.
இந்த அரசு நிகழ்ச்சியை, அரசு மாநாடு போல் நடத்துவதற்கு அமைச்சர் மூர்த்தி ஏற்பாடுகள் செய்து உள்ளார். இதுவரை மதுரை மட்டுமின்றி, தமிழகத்தில் எங்குமே ஒரு லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்ததில்லை. முதன் முறையாக அரசு நலத்திட்ட நிகழ்ச்சி மிக பெரியளவில் நடத்தப்படுகிறது.
மகளிர் குழுவினர்
எனவே இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலைஞர் திடலில் அமைச்சர் மூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மேயர் இந்திராணி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆய்வுக்கு பின் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது அதன்படி மதுரை மாவட்டத்தில் 6-ந் தேதி (நாளை) மாவட்ட நிர்வாகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 75,000 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.180 கோடி கடன் உதவி வழங்கப்படுகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்த நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு அவர்களை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பாதுகாப்பான முறையில் அழைத்து வருவது போன்ற வேலைகளை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.