தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு
களக்காடு அருகே தொழிலாளியிடம் செல்போன் பறித்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நம்பி மகன் ரவிகுமார் (வயது 29). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் ஆலையில் மேற்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று இரவில் இவர் ஆலைக்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் டாஸ்மாக் கடை அருகில் சென்றபோது மோட்டார் சைக்கிள் டயர் பஞ்சரானது. இதனால் அவர் அங்கு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருக்குறுங்குடி தென்கரை கீழத்தெருவை சேர்ந்த மணி மகன் மாதவன் (23), ஜெ.ஜெ.நகரை சேர்ந்த அப்துல்வகாப் மகன் அக்பர் அலி (19) உள்பட 4 பேர் ரவிகுமாரிடம் செல்போன், பணம் தருமாறு கேட்டனர். அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவன் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.