சேலத்தில் ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவரிடம் செல்போன் பறிப்பு-தண்டவாளம் அருகே நின்ற வாலிபர் கைவரிசை


சேலத்தில் ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவரிடம் செல்போன் பறிப்பு-தண்டவாளம் அருகே நின்ற வாலிபர் கைவரிசை
x

சேலத்தில் ரெயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்த என்ஜினீயரிங் மாணவரிடம் தண்டவாளம் அருகே திட்டில் நின்று செல்போனை பறித்துக்கொண்டு தப்பிஓடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

என்ஜினீயரிங் மாணவர்

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள பெரிய குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (வயது 20). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். 2 நாட்கள் விடுமுறையையொட்டி ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை கோபிகிருஷ்ணன் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

பின்னர் அவர் மாலை 6.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரெயிலில் ஏறி அமர்ந்தார். அந்த ரெயில் சத்திரம் ரெயில் நிலையத்தை கடந்து அரசு ஆஸ்பத்திரி அருகே மெதுவாக வந்து கொண்டிருந்தது. அப்போது கோபிகிருஷ்ணன் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபடி செல்போன் பார்த்து கொண்டிருந்தார்.

செல்போன் பறிப்பு

அதேநேரத்தில் பெரியார் மேம்பாலத்தின் கீழே ரெயில் சென்றது. அப்போது பாலத்தின் அடிப்பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள ஒரு பெரிய திட்டில் நின்று கொண்டிருந்த சுமார் 20 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென கோபிகிருஷ்ணன் கையில் இருந்த செல்போனை லாவகமாக பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.

ஓடும் ரெயிலில் இருந்து உடனே இறங்க முடியாத கோபிகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து டவுன் ரெயில் நிலையத்தில் இறங்கிய கோபிகிருஷ்ணன், சம்பவம் குறித்து சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓடும் ரெயிலில் படிக்கட்டில் நின்று செல்பி எடுப்பது செல்போன் பார்ப்பது போன்ற விஷயங்கள் உயிர் பலியை ஏற்படுத்தும் என்பதை போன்று, படிக்கட்டில் நின்று செல்போன் பார்த்தால் செல்போனை திருடர்கள் தட்டிப்பறித்து செல்லும் நிகழ்வும் நடக்கலாம் என்பதால் பயணிகள் கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும் என்று ரெயில்வே போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.Next Story