செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து    கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

முற்றுகை

விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலை, ஷீரடி சாய்நகர், ஏ.பி.எஸ். நகர், தெய்வநகர், ஜனகராஜ் கார்டன், ராஜகோபால் நகர், அமுதா லே-அவுட், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது தங்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அந்த பணியை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை ஷீரடி சாய்நகரில் தனிநபர் ஒருவரின் வீட்டு மாடியில் தனியார் செல்போன் நிறுவனத்தினர், செல்போன் கோபுரம் அமைக்க கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைத்தால் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பலவித நோய்கள் ஏற்படும் எனக்கூறி செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்களை நடத்தியதன் விளைவாக அப்பணி கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் அதே இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்த பணியை உடனடியாக மாவட்ட கலெக்டர், தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story