கோவில்களில் செல்போன்களுக்கு தடை
கோவில்களில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருப்பதி கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு போக முடியாது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் அவ்வாறே செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை.
செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு லாக்கர்களின் வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
செல்போன்களுக்கு தடை
அதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இனி செல்போன்கள் கொண்டு போக முடியாது. அங்கு செல்போன்களுக்கு தடைவிதிக்கும்படி மதுரை ஐக்கோர்ட்டு ஆணையிட்டு இருக்கிறது.
திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் சீதாராமன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
''சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்துவது, சுவாமிக்கு நடக்கும் தீபாராதனையை செல்போன்களில் பதிவு செய்வது, சிலைகள் முன்பு செல்பி எடுத்துக் கொள்வது, சிலைகளை படம் எடுப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகிறார்கள். எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள் மேற்கண்ட ஆணையைப் பிறப்பித்தார்கள்.
ஆதங்கம்
நீதிபதிகள் அப்போது வெளியிட்ட சில கருத்துகள், அவர்களின் மனவருத்தங்களை வெளிபடுத்தும் விதமாக அமைந்துள்ளன.
* கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளை அர்ச்சகர்களே வீடியோ எடுத்து தனிப்பட்ட யூடியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். இது ஏற்கத்தக்கது அல்ல.
* திருப்பதி கோவிலில் வாசலைக்கூட படம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலை முன்பு செல்பி எடுக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது.
* கோவில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோவிலுக்கு டீ-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்க முடியவில்லை.
இவ்வாறு ஆதங்கப்பட்ட நீதிபதிகள் திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டு, அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறை கமிஷனருக்கு உத்தரவிட்டும் இருக்கிறார்கள்.
பொதுவாக புதிய இடங்களுக்கோ, தொன்மையான இடங்களுக்கோ செல்கிறபோது அதன் அடையாளமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆவல் அனைவரிடமும் இருப்பது இயல்பே. அதுவும் செல்போன் மனிதர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட நிலையில் அது பேராவலாக அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.
தீவிரவாதிகள்
மும்பையில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பின்பு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்குள் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் மற்றும் கேமரா உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல காவல்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லத்தான் செல்கின்றனர். இவ்வாறு செல்போன் கொண்டு செல்லும் பக்தர்கள் கோவிலின் சாமி சன்னதி, அம்பாள் சன்னதி மற்றும் மூன்றாம் பிரகாரங்களிலும் நின்று செல்போனில் செல்பி எடுத்து தான் வருகின்றனர்.
இந்தநிலையில் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு போவதற்கு தடைவிதிப்பது பற்றி பொதுமக்கள் குறிப்பாக பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை காண்போம்.
வரவேற்பு
கவிப்பிரியா (தனியார் பள்ளி ஆசிரியை, காரைக்குடி):- கோவில் என்பது புனித ஸ்தலமாக இருந்து வருகிறது. அங்கு கூடும் பக்தர்கள் மனதை ஒருங்கிணைத்து இறைவனை வேண்டுவதற்காகவே அங்கு செல்கின்றனர். அங்கு பக்தர்களோ அல்லது அர்ச்சகர்களோ செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த சட்டத்தை வரவேற்கிறேன்.
புதுமை மகேந்திரன் (காரைக்குடி):- கோவில்களில் செல்போனை தவிர்த்தல் என்பது அனைவருக்கும் நன்று. ஏனெனில் அங்கு ஒன்று கூடும் அனைவரும் தங்களது வேண்டுதல்களை வைக்கும் சமயத்தில் செல்போன் பயன்பாடு என்பது தேவையில்லாத ஒன்றாகும். இதை அனைவரும் கடை பிடித்தால் நன்று.
சுவிட்ச் ஆப் செய்யலாம்
மடப்புரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த லெட்சுமி(மதுரை):- செல்போனை கோவிலுக்குள் கொண்டு செல்வது மிகவும் தவறாகும். வரிசையில் நிற்கும் போதும், சாமி கும்பிடும் போதும் செல்போன் ஒலிப்பதால் சாமி தரிசனம் செய்யும்போது கவனம் சிதறுகிறது. இல்லையெனில் கோவில் உள்ளே நுழையும் போது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு, தரிசனம் முடித்து கோவிலுக்கு வெளியே வந்த பின்பு ஆன் செய்து கொள்ளலாம். இதனால் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும் இருக்காது.
விஜயா(மதுரை):- கோவிலுக்குள் செல்போன் உபயோகிப்பது கூடாது. ஏனென்றால் நிம்மதியாக சாமி கும்பிட விடாமல் இடையூறாக இருக்கும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளது போல் செல்போனை ஆப் செய்து வாங்கிக்கொண்டு, டோக்கன் சிஸ்டம் கொடுத்து கோவிலின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்து முடித்து திரும்பி வந்து வாங்கிக்கொள்ள சொல்லலாம். இவ்வாறு செய்தால் நல்லபடியாக சுவாமி தரிசனம் செய்த திருப்தி கிடைக்கும்.