கோவில்களில் செல்போன்களுக்கு தடை
கோவில்களில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருப்பதி கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு போக முடியாது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் அவ்வாறே செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை.
செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு லாக்கர்களில் வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
செல்போன்களுக்கு தடை
அதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இனி செல்போன்கள் கொண்டு போக முடியாது. அங்கு செல்போன்களுக்கு தடைவிதிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு ஆணையிட்டு இருக்கிறது.
திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் சீதாராமன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
''சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்துவது, சுவாமிக்கு நடக்கும் தீபாராதனையை செல்போன்களில் பதிவு செய்வது, சிலைகள் முன்பு செல்பி எடுத்துக் கொள்வது, சிலைகளை படம் எடுப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகிறார்கள். எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள் மேற்கண்ட ஆணையைப் பிறப்பித்தார்கள்.
ஆதங்கம்
நீதிபதிகள் அப்போது வெளியிட்ட சில கருத்துகள், அவர்களின் மனவருத்தங்களை வெளிபடுத்தும் விதமாக அமைந்துள்ளன.
* கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளை அர்ச்சகர்களே வீடியோ எடுத்து தனிப்பட்ட யூடியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். இது ஏற்கத்தக்கது அல்ல.
* திருப்பதி கோவிலில் வாசலைக்கூட படம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலை முன்பு செல்பி எடுக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது.
* கோவில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோவிலுக்கு டீ-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்க முடியவில்லை.
இவ்வாறு ஆதங்கப்பட்ட நீதிபதிகள் திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டு, அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறை கமிஷனருக்கு உத்தரவிட்டும் இருக்கிறார்கள்.
ஆவல் அதிகரிப்பு
பொதுவாக புதிய இடங்களுக்கோ, தொன்மையான இடங்களுக்கோ செல்கிறபோது அதன் அடையாளமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆவல் அனைவரிடமும் இருப்பது இயல்பே. அதுவும் செல்போன் மனிதர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட நிலையில் அது பேராவலாக அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.
இந்தநிலையில் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு போவதற்கு தடைவிதிப்பது பற்றி பொதுமக்கள் குறிப்பாக பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை காண்போம்.
கட்டுப்பாடு
சிவகாசியை சேர்ந்த போத்தி சீனிவாசன்:- தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் செல்போன் பேச தடை விதித்துள்ள நிலையிலும் பல பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு வந்து பேசுகிறார்கள். இது மற்றவர்களுக்கு சிரமத்தை உண்டாக்குகிறது. திருப்பதியில் இந்த நடைமுறை மிகவும் கடுமையாக பின்பற்றப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்த கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும். இதை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எனவே கோவில் வளாகத்தில் செல்போன் பாதுகாப்பு அறையை ஏற்படுத்தி அதில் செல்போன்களை வாங்கி வைத்து, பக்தர்கள் திரும்பி செல்லும் போது அவர்களிடம் அந்த செல்போன்களை ஒப்படைக்க வேண்டும்.
கோவில் கருவறை
ராஜபாளையம் சிதம்பரநாதன்:- கோவில்கள் என்பது பக்தி, அமைதி ஆகியவை பின்பற்றக்கூடிய தலம். எனவே அங்கு செல்போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் கண்டிப்பாக விதிக்க வேண்டும். ஆனால் ஒரு சில நேரங்களில் மிகப்பெரிய கோவில்களுக்கு செல்லும் பொழுது நமது உற்றார், உறவினர்களை தொடர்பு கொள்வதற்கோ, வேறு ஏதேனும் முக்கிய அழைப்புகளை நாம் தவற விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை என்பதை திருத்தம் செய்து ஒரு சில விதிமுறைகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் விதித்தால் நன்றாக இருக்கும். கோவிலில் அர்ச்சகர்களும் கருவறைகளில் செல்போன் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
கோவிலில் செல்பி
சாத்தூர் மகேஸ்வரி:- மனதார சாமி தரிசனம் செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டி கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு செல்போன் பயன்படுத்துவது என்பது அனைவருக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் இருக்கும். பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நேரத்தில் செல்பி என்ற பெயரில் புகைப்படம் எடுத்து மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தவிர்க்க வேண்டும்.
விருதுநகர் சந்திரசேகரன்:-
கோவில் வளாகங்களில் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்வது வரவேற்கக்கூடியது தான். ஏனெனில் வழிபடுபவருக்கு செல்போன் பயன்பாடு இடையூறாக இருக்கும் நிலையில் அது தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். மேலும் தமிழக கோவில்களில் உள்ள கலை பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அவை படம் எடுக்கப்பட்டு தவறான பயன்பாட்டிற்கு உட்படுவதை தவிர்க்க செல்போனுக்கு விதிக்கப்பட்ட தடை அத்தியாவசிய தேவையாகும். அனைத்து கோவில்களிலும் செல்போனுக்கு தடை விதிக்க வேண்டும்.
கவனச்சிதறல்
விருதுநகர் சுப்புலட்சுமி:-
தெய்வ சன்னதியில் மனம் ஒன்றி பிரார்த்தனை செய்வதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செல்போன் பயன்பாடு கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது. தற்போது உள்ள நிலையில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி குறிப்பிட்ட கோவிலில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். தமிழக அரசு இதனை உடனே அமல்படுத்த வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி:- கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல நீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் கோவில் நுழையும் இடத்தில் செல்போன் பாதுகாப்பு அறை மிகவும் பாதுகாப்புடன் அமைக்க வேண்டும். விலை உயர்ந்த செல்போன்களை பாதுகாப்பு அறையில் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும்.