கோவில்களில் செல்போன்களுக்கு தடை பக்தர்கள் கருத்து


கோவில்களில் செல்போன்களுக்கு தடை  பக்தர்கள் கருத்து
x
தினத்தந்தி 13 Nov 2022 6:45 PM GMT (Updated: 13 Nov 2022 6:46 PM GMT)

கோவில்களில் செல்போன்களுக்கு தடை விதிப்பது குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடலூர்

திருப்பதி கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு போக முடியாது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் அவ்வாறே செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை.

செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு லாக்கர்களில் வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

செல்போன்களுக்கு தடைCell phones are banned in temples

Devotees comment

அதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இனி செல்போன்கள் கொண்டு போக முடியாது. அங்கு செல்போன்களுக்கு தடைவிதிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு ஆணையிட்டு இருக்கிறது.

திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் சீதாராமன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

''சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்துவது, சுவாமிக்கு நடக்கும் தீபாராதனையை செல்போன்களில் பதிவு செய்வது, சிலைகள் முன்பு செல்பி எடுத்துக் கொள்வது, சிலைகளை படம் எடுப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகிறார்கள். எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள் மேற்கண்ட ஆணையைப் பிறப்பித்தார்கள்.

ஆதங்கம்

நீதிபதிகள் அப்போது வெளியிட்ட சில கருத்துகள், அவர்களின் மனவருத்தங்களை வெளிபடுத்தும் விதமாக அமைந்துள்ளன.

* கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளை அர்ச்சகர்களே வீடியோ எடுத்து தனிப்பட்ட யூடியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். இது ஏற்கத்தக்கது அல்ல.

* திருப்பதி கோவிலில் வாசலைக்கூட படம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலை முன்பு செல்பி எடுக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது.

* கோவில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோவிலுக்கு டீ-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்க முடியவில்லை.

இவ்வாறு ஆதங்கப்பட்ட நீதிபதிகள்

திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டு, அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறை கமிஷனருக்கு உத்தரவிட்டும் இருக்கிறார்கள்.

ஆவல் அதிகரிப்பு

பொதுவாக புதிய இடங்களுக்கோ, தொன்மையான இடங்களுக்கோ செல்கிறபோது அதன் அடையாளமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆவல் அனைவரிடமும் இருப்பது இயல்பே. அதுவும் செல்போன் மனிதர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட நிலையில் அது பேராவலாக அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.

இந்தநிலையில் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு போவதற்கு தடைவிதிப்பது பற்றி பொதுமக்கள், குறிப்பாக பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை காண்போம்.

தடை செய்ய வேண்டாம்

கடலூர் ராமு:- கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று சொல்ல முடியாது. ஏனெனில் மூலவரை தரிசனம் செய்ய சில நேரங்களில் 1 மணி நேரத்துக்கும் மேலாக ஆகி விடும். அப்போது நமக்கு வரும் முக்கிய அழைப்புகளை எடுக்க முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக ஒருவர் அவசர உதவிக்காக அழைத்தால், அவருக்கு தகுந்த நேரத்தில் சென்று உதவ முடியாமல் ஆகி விடும். ஆகவே கோவிலுக்குள் செல்போன் கொண்டு சென்றாலும், அதை வைபரேஷன் மோடில் போட்டுக்கொள்ள வேண்டியது தான். அதை விட்டு, முழுமையாக தடை செய்ய வேண்டாம்.

வரவேற்கிறேன்

சிதம்பரம் டாக்டர் சந்தியா:- அமைதியை தேடி தான் பொதுமக்கள் கோவிலுக்கு செல்கிறார்கள். அப்படி இருக்கும் போது, அங்கு செல்போன் கொண்டு சென்று, மற்றவர்களுக்கும் இடையூறு செய்வது என்பது வேண்டாம். இதற்கு தடை விதித்ததை வரவேற்கிறேன். சில கோவில் கருவறையை படம் எடுக்கக்கூடாது என்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு சென்றாலும், அங்கு படம் எடுக்க அனுமதியில்லை. இதேபோல் அனைத்து கோவில்களிலும் செல்போன்களை கொண்டு செல்ல தடை விதித்து அதை பாதுகாக்க தனி இடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடையூறு ஏற்படுத்தக்கூடாது

விருத்தாசலம் கவிதா :- முன்பெல்லாம் கோவிலுக்குள் சென்றால் பக்தி பரவசம் மட்டுமே இருக்கும். ஆனால் இன்று கோவிலுக்குள் எங்கு பார்த்தாலும் செல்போன் மயமாகவே உள்ளது. ஒரு சிலர் ஆங்காங்கே நின்று கொண்டு புகைப்படங்கள் எடுப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது மற்ற பக்தர்களுக்கு இடையூறாக தான் அமையும். செல்போன் என்பது மற்றவர்களை தொடர்பு கொள்வதற்கும், அவசர தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பக்தர்கள் பலர் நிம்மதி இழந்து மன அழுத்தத்தோடு தான் கோவிலுக்கு வருகிறார்கள். தெய்வதரிசனம் முடிந்ததும் அவர்களுக்குள் ஒரு நிம்மதி ஏற்படும். அப்படி இருக்கும் போது பக்தர்களுக்கு நாம் எந்த விதத்திலும் இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது. கோவில்களை ஆன்மிக தலமாக பார்க்க வேண்டுமே தவிர, சுற்றுலா தலமாக பார்க்க கூடாது.

எடுத்து செல்லாமல் இருப்பது நல்லது

வக்கீல் மணிகண்டராஜன்:- கோவிலுக்கு போகும்போது செல்போனை எடுத்து போகாமல் இருப்பதே நல்லது. மன அமைதிக்காகவும் மனதை ஒரு நிலைப்படுத்தவும் இறைவனை தரிசனம் செய்வதற்காகவே கோவிலுக்கு செல்கிறோம். அப்படி செல்லும்போது நம்மை போலவே மற்றவர்களும் மன அமைதிக்காகவே கோவிலுக்கு வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் வைத்திருக்கும் செல்போன் ரிங் டோன் மற்றவர்களை பாதிக்கும் அளவுக்கு ஒலியை எழுப்புகிறது. இதனால் மனதை ஒருநிலை படுத்த முடியாது. அதனால் செல்போன் மற்ற பக்தர்களுக்கு இடையூறாக தான் இருக்கும். நாம் நமது உயர் அதிகாரிகளை சந்திக்க செல்லும்போதும், மருத்துவர்களை பார்க்க செல்லும் போதும், நீதிமன்றம் போன்ற முக்கிய இடங்களுக்கு செல்லும்போது செல்போனை அணைத்து விட்டு தான் உள்ளே செல்கிறோம். ஆனால் தெய்வம் என்பது எல்லாவற்றிற்கும் ஒரு மேம்பட்ட அம்சம். கோவிலுக்குள் மட்டும் செல்போனை அணைக்காமல் எடுத்துச் செல்வது, கோவிலுக்குள் நின்று கொண்டு புகைப்படங்களுக்கு வித, விதமாக போஸ் கொடுப்பது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல, பக்தர்கள் அனைவருமே செல்போனை அணைத்துவிட்டு கோவிலுக்குள் இருக்கும் சிறிது நேரமாவது இறைவனை மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும்.


Next Story