நெம்மேலிகுப்பத்தில் கடல் அரிப்பால் தொங்கி கொண்டிருக்கும் சிமெண்டு சாலை


நெம்மேலிகுப்பத்தில் கடல் அரிப்பால் தொங்கி கொண்டிருக்கும் சிமெண்டு சாலை
x

நெம்மேலிகுப்பத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு சிமெண்டு சாலை தொங்கி கொண்டிருக்கிறது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 200 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மீனவர்கள் தினமும் 50 படகுகளில் சென்று தினமும் மீன்பிடிப்பது வழக்கம்.

இந்த பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நெம்மேலி குப்பத்தில் கடல் அலைகள் 30 மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி வந்து மணற்பரப்புகளை அரித்ததால் கரைப்பகுதியில் 5 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு அங்குள்ள சிமெண்டு சாலைகளின் கான்கிரீட்டுகள் இடிந்து விழுந்துவிட்டன.

சிமெண்டு சாலையின் ஒரு பகுதி தொங்கி கொண்டு எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. அதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு, மீன்பிடி வலைகளை மாற்று இடத்தில் கொண்டு போய் வைத்து பாதுகாத்து வருகின்றனர். தற்போது கடல் மேலும் 20 மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி வந்து, சிமெண்டு சாலை சேதம் அடைந்து விட்டதால் தங்கள் மீன்பிடி உபகரணங்களை வைக்க இடம் இல்லாமல் நெம்மேலிகுப்பம் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக இந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்த பகுதி மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் நெம்மேலி கடல் பகுதி படகு போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதிகாரிகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெம்மேலிகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story