நெல் கொள்முதல் விதிமுறைகளில் மத்திய அரசு தளர்வு அறிவிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் கடிதம்


நெல் கொள்முதல் விதிமுறைகளில் மத்திய அரசு தளர்வு அறிவிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் கடிதம்
x

அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் நெல் கொள்முதல் விதிமுறைகளில் மத்திய அரசு தளர்வுகள் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நெல் கொள்முதல் விதிமுறையில் தளர்வு

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள், பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி உள்ள காரணத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களை துரிதமாக தூர்வாருதல், மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடுதல், விவசாயிகளுக்கு குறுவைத்தொகுப்பு வழங்குதல் போன்று தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்து, குறுவை பருவத்தில் 4.19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. மாநிலத்தில் 16.43 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு, சம்பா மற்றும் நவரை பயிரின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.

ஒரு லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கின

பிப்ரவரி மாதத்தில் (இம்மாதம்) நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நேரத்தில், துரதிஷ்டவசமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால், சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, அறுவடைப் பணியை மீண்டும் தொடங்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் நிலையில், தொடர்ந்து பலத்த மழை பெய் வதால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பத அளவு மிக அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

22 சதவீத ஈர நெல் கொள்முதல்

கடந்த காலங்களில், குறுவை பருவத்தில், பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், மாநில கொள்முதல் முகமையான, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், நெல் கொள்முதலில் ஈரப்பதம் குறித்த விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு அனுமதி அளித்தது. பருவம் தவறிய இந்த மழையின் தற்போதைய சூழ்நிலையில், கொள்முதல் ஈரப்பதத்தில் அதேபோன்ற தளர்வு தேவைப்படுகிறது. அதன் மூலம் நெல் கொள்முதல் பணிகளை சீராக செய்து முடிக்க இயலும்.

எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும், தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


Next Story