மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் காமராஜ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை சாசனங்கள் மீது பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பதவிகளில் நேரடி நியமனத்திற்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 29 சதவீத பதவிகளை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும், பணியாளர்களின் பணி நிலைத்திறன் மாற்றம் செய்ய வேண்டும், மாநில ஆள்சேர்ப்பு மையத்தின் மூலம் 2015-16-ம் ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்பட்ட உதவியாளர்கள் பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நிலவள வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பாஸ்கரன், நகர வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தண்டபாணி, மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்க துணைத்தலைவர் அன்பரசன், துணை செயலாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் உத்ரா, பூரணி, சங்கீதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story