மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்
பெரம்பலூரில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கலையரசி தலைமை தாங்கினார். மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோடிக்கணக்கான ஏழைகளின் உணவு மானியம் ரூ.1 லட்சம் கோடி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.50 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் ரூ.29 ஆயிரம் கோடி வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் அருகே மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நகல்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.