விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்


விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
x

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், விவசாய கடன்கள் ரத்து செய்வதுடன், மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

பெரம்பலூர்

ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பை சேர்ந்த விவசாயிகள் நேற்று மாலை கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே ஊர்வலமாக புறப்பட்ட விவசாயிகள் புதிய பஸ் நிலையத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலத்தில் விவசாயிகள் பலர் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடிகளுடன், சில விவசாயிகள் தங்களது இருசக்கர வாகனங்களுடன் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கடன்களை ரத்து செய்ய வேண்டும்

டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்ட உத்தரவாதம் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் இருந்து விவசாய விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்ய உத்தரவாதப்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும். நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம்

60 வயதை பூர்த்தியடைந்த விவசாயிகளுக்கும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகளும், அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் டிராக்டரில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் போலீஸ் அனுமதி கொடுக்காததால் டிராக்டர் ஊர்வலத்தை விவசாயிகள் கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story