மத்திய அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது: கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150-க்கு கொள்முதல்-விவசாயிகள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி
மத்திய அரசின் புதிய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. எனவே கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கொப்பரை தேங்காய்
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதார திட்டத்தின் கீழ் கோவை வேளாண் விற்பனை குழு பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரிமலை, அன்னூர், ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.105.90-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் சுமார் 18 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து கிட்டதட்ட 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய், ரூ.185 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்க வேண்டும் என்றும், கிலோவுக்கு ரூ.150 வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு வருகிற 2023-ம் ஆண்டு சீசனுக்கான கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது. அதன்படி அரவை கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.108.70-க்கும், பந்து கொப்பரை தேங்காய் ரூ.117.50-க்கும் கொள்முதல் செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தென்னை உற்பத்தியாளர்கள் மாநில சங்க பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:-
விவசாயிகளுக்கு பயன் இல்லை
கடந்த ஆண்டு மத்திய அரசு விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காயை விவசாயிகளிடம் இருந்து ரூ.105.90-க்கு கொள்முதல் செய்தது. விவசாயிகள் கிலோவுக்கு ரூ.150 வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் 2023-ம் ஆண்டு சீசனுக்காக கொப்பரை தேங்காய் ஒரு கிலோவுக்கு ரூ.2.70 மட்டும் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது அரவை கொப்பரை தேங்காய் ரூ.108.70-க்கும், கடந்த முறை கிலோவுக்கு ரூ.110-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பந்து கொப்பரை தேங்காய் தற்போது ரூ.117.50 கொள்முதல் செய்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென் இந்தியாவில் பந்து கொப்பரை தமிழகம், கேரளாவில் உற்பத்தி கிடையாது.
கர்நாடகாவில் மட்டும் 10 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. பந்து கொப்பரை தேங்காய்க்கு மட்டும் ரூ.7.50 உயர்த்தப்பட்டு உள்ளதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. தற்போது பெயரளவிற்கு மட்டும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் சீசனுக்கு முன்பாக கொப்பரை தேங்காய் கொள்முதல் குறித்து அறிவிக்க வேண்டும். ஆனால் ஆண்டுதோறும் சீசன் முடிந்த பிறகு தான் கொள்முதல் செய்கின்றனர். கடந்த முறை 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முறை 2 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும். அப்போது தான் விவசாயிகள் பயன் பெறுவார்கள். மேலும் மத்திய அரசு பரிசீலனை செய்து கொப்பரை தேங்காய்க்கு கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிலோ ரூ.150-க்கு கொள்முதல்
கொப்பரை தேங்காய் விவசாயி பத்மநாபன் என்பவர் கூறியதாவது:-
கொப்பரை தேங்காயை உற்பத்தி செய்வதற்கு ரூ.142 செலவாகிறது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது மத்திய அரசு கொப்பரை தேங்காய் கிலோவுக்கு கூடுதலாக ரூ.2.70 கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.20 வரை கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஏற்கனவே தேங்காய் விலை குறைவால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மாநில அரசு கரும்பு, நெல்லுக்கு ஊக்கத்தொகை கொடுப்பது போன்று கொப்பரை தேங்காய்க்கும் ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும். மேலும் கொப்பரை தேங்காயை கிலோவுக்கு ரூ.150-க்கு கொள்முதல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசுக்கு பரிந்துரை
இதுகுறித்து கோவை விற்பனை குழு அதிகாரிகள் கூறியதாவது:-
மத்திய அரசு 2023-ம் ஆண்டு சீசனுக்கான கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது. அரவை கொப்பரை தேங்காய்க்கு நியாயமான தரத்திற்கு ஏற்ப குவிண்டால் ரூ.10860-க்கும், பந்து கொப்பரை தேங்காய் ரூ.11750-க்கும் கொள்முதல் செய்யப்படும். இது முந்தைய சீசனை விட அரவை கொப்பரை கிலோவுக்கு ரூ.2.70, பந்து கொப்பரை ரூ.7.50 அதிகமாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொள்முதல் செய்வது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்பபு உள்ளது. ஏற்கனவே விவசாயிகள் கொடுத்த கோரிக்கையை ஏற்று அரசுக்கு கூடுதல் விலைக்கு கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்து குறித்து பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.