கருணாநிதி நினைவாக, சென்னை மெரினாவில் கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி


கருணாநிதி நினைவாக, சென்னை மெரினாவில் கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி
x

முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்படுகிறது.

பேனா நினைவுச்சின்னம்

தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் இந்த நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை, இலக்கிய சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன ஒளிப்படங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது.

இந்த பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் வகையில் அவரது நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் தமிழக அரசின் சார்பில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பொதுப்பணித்துறை சார்பில் வங்கக்கடலில் 8 ஆயிரத்து 551 சதுர மீட்டர் பரப்பளவில் 30 மீட்டர் உயரத்தில் இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட உள்ளது.

இதனை கண்டுகளிக்க பார்வையாளர்கள் நடந்து செல்வதற்காக மெரினா கடற்கரையில் இருந்து 290 மீட்டர் நிலப்பரப்பிலும், 360 மீட்டர் கடலின் மேல் மட்டத்திலும் என 650 மீட்டர் நீளத்தில் 7 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்படுகிறது.

கருத்து கேட்பு கூட்டம்

இதனையடுத்து பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

தமிழக அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

அதன்படி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. சென்னை கலெக்டர் அமிர்தஜோதி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

சீமான் எதிர்ப்பு

இந்த கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடுக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பேனா சின்னத்தை உடைப்பேன் என்றும் ஆவேசமாக அவர் கூறினார்.

இவர் தவிர சிலர் எதிர்ப்பும், பலர் ஆதரவும் தெரிவித்தனர். அனைவரும் தெரிவித்த கருத்துகள் பதிவு செய்யப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டது.

மத்திய அரசு அனுமதி

இந்த நிலையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் 12 உறுப்பினர்களை கொண்ட நிபுணர் மதிப்பீட்டுக்குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில், 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச்சின்னம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

நிபந்தனைகள்

மத்திய அரசு விதித்த நிபந்தனைகள் விவரம் வருமாறு:-

* மெரினா கடலோரத்தில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதியில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளம் இருப்பதால் அவர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

* நினைவுச்சின்னம் கட்டும்போது கடலோர நிபுணர் குழுவினர் தலைமையில் கண்காணிப்பு குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

* நினைவு சின்னம் கட்ட எந்த காரணத்தை கொண்டு நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது.

* எதிர்காலத்தில் நினைவுச்சின்னம் தொடர்பாக கோர்ட்டு ஏதேனும் உத்தரவிட்டால் அதனை கடைப்பிடிக்க வேண்டும்.

* நினைவுச்சின்னத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

* சென்னை கடலோரப்பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும் காலக்கட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது.

* நினைவு சின்னத்திற்கு செல்ல சரியான சாலை வசதி இருப்பதை உறுதி செய்யுங்கள்.

* போக்குவரத்து திட்டம் மற்றும் அவசர காலங்களில் மக்களை வெளியேற்றுதல் ஆகியவை சரியாக அமல்படுத்த வேண்டும்.

* மண் அரிப்பு மற்றும் மணல் திரட்சி ஏற்படுவதை கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் கண்காணிக்க வேண்டும்.

* இந்த திட்டம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தவறு அல்லது தவறாக வழிநடத்தப்படும் பட்சத்தில் திட்டம் நிராகரிக்கப்படும்.

இவை உள்பட மொத்தம் 15 நிபந்தனைகளை மத்திய அரசு விதித்து உள்ளது.

திட்ட அறிக்கை

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கிய நிலையில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை பேனா நினைவுச்சின்னத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.


Next Story