சிறப்பாக பணியாற்றிய 49 போலீசாருக்கு சான்றிதழ்


சிறப்பாக பணியாற்றிய 49 போலீசாருக்கு சான்றிதழ்
x
தினத்தந்தி 13 July 2023 12:36 AM IST (Updated: 13 July 2023 4:28 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய 49 போலீசாருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

ராணிப்பேட்டை

கருத்தரங்கம்

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று 'இமைகள் கருத்தரங்கம்' என்ற பெயரில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு விசுவேசுவரய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கி பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற அறிவுரைகளையும், பாலியல் வழக்குகளை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலமாக தண்டனை பெற்றுத்தர வேண்டிய நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

குற்ற வழக்குகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 6 மாதத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக 154 வழக்குகள் பதிவு செய்து 176 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 64 கிலோ கஞ்சா மற்றும் 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா சம்பந்தமாக மொத்தம் 226 வழக்குகள் பதிவு செய்து 1,421 கிலோ குட்கா மற்றும் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 216 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாராய விற்பனையில் 1,768 வழக்குகள் பதிவு செய்து 1,065 லிட்டர் சாராயம், 1552 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளதோடு, 199 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 4 ரவுடிகள், வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் 8 பேர், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை தொடர்பாக 11 பேர், பாலியல் குற்றவாளிகள் 2 பேர், சாராய விற்பனையில் ஒருவர் என மொத்தம் 26 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டு மற்றும் குற்ற வழக்குகள் தொடர்பாக 74 வழக்குகள் பதிவு செய்து 72,30,140 ரூபாய் இழந்ததில் 58,25,020 ரூபாய் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடைத்ததோடு குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் நீதிமன்றம் மூலமாக குற்றவாளிகள் தண்டனை பெற சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 14 பேர் மற்றும் தலைமை காவலர்கள், காவலர்கள் 35 பேர் என மொத்தம் 49 பேருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் ராணிப்பேட்டை பிரபு, மாவட்ட குற்றப்பிரிவு ரவிச்சந்திரன், ஆயுதப்படை சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


Next Story